விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் - விருச்சிகம்

இந்த புது வருட தொடக்கத்தில் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி  தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது  பாக்கிய ஸ்தானத்தில் ராகு  அயன சயன
போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் அமைந்திருக்கின்றன. செவ்வாயை ராசிநாதனாகக் கொண்டு, முருகப் பெருமானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் முன்னனி பெற்று விளங்குவீர்கள். வார்த்தைப் பிரயோகங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்கான பணிகளை முன் நின்று நடத்துவீர்கள். இந்த ஆண்டில் உங்களுக்கு உதவி செய்திட பலரும் முன் வருவார்கள். மனதை அரித்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தெரியும். செய்தொழிலில் சிறிது தேக்கநிலை இருந்தாலும் வருமானத்திற்குக் குறைவு வராது. புதிய முயற்சிகளும் ஓரளவுக்குக் கை கொடுக்கும். உங்கள் செயல்களுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். திருமணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக இருக்கும். மற்றபடி வெளியூரில்  இருந்து மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் செய்திகள் வந்து சேரும். மேலும் பழைய கடன் பாக்கிகளும் வசூலாகும்.

புதுப்புதுப் பிரச்னைகளுக்கு நூதனமாகக் சிந்தித்து முடிவு காண்பீர்கள். அதே நேரம், குடும்பப் பிரச்னைகளில் மூன்றாம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த சிலர் இப்போது குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். சக பணியாளர்களின் நட்புறவு உங்கள் பணிகளைக் குறைக்கும். பொருளாதார உயர்வு இருக்கும். எனினும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. வேலைப்பளு கூடினாலும் தேவைக்கேற்ப சக ஊழியர்கள் உதவுவர். வியாபாரிகளுக்கு:  கடின முயற்சியால் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய கிளைகள் திறப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.

ஜவுளி வியாபாரிகள் கூடுதல் லாபத்தைப் பெறுவார்கள். வசூல் செய்வதில் சிறிது கவனத்துடன் இருப்பது அவசியம்.  படிப்படியான வளர்ச்சி நிலை உங்கள் தொழிலில் உண்டு. வேலையாட்களால் சிறு சிறு பிரச்னைகள் காணப்படும். எனினும் சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கிடைக்கும். எனவே கடன் பெறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்து திருப்தி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக கலைஞர்களிடம் பகைமை இன்றி சுமுகமாகப் பழகி வருவது அவசியம். சிலருக்கு விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். வெளியூர் பயணம் சென்று வர நேரிடும். நீங்கள் முயற்சி செய்வதன் மூலம் பிரபலமானவர்களுடன் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். அதில் பண வரவை எதிர்பார்க்க வேண்டாம்.

நல்ல அனுபவ அறிவு கிடைக்கும். அது பின்னாளில் உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக உதவியாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பார்வம் நாளுக்கு நாள் முன்னேற்றமடையும். கல்வி நிலையங்களில் சக மாணவர்களிடம் சண்டையிடுவதை தவிர்ப்பது நலம். விளையாட்டு மற்றும் பிற விஷயங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். மாநில அளவிலும் நீங்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வாய்ப்பு உள்ளது. உங்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து வழிகளையும் நீங்கள் தேடிச் செல்ல வேண்டும். விடாது முயன்றால் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டாக இது இருக்கும். அரசியல்வாதிகள் பொறுப்பான பணிகளுக்காக தலைமையின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலும் அவர்களின் தனிப்பட்ட அபிமானத்தையும் பெற்று மகிழ்வீர்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உங்களுடன் உள்ள சிலரே பொறாமைப் படுவார்கள்.

புதிய முயற்சிகளில் திட்டமிட்டுச் செய்தால் வெற்றி உண்டு. தொகுதி மக்களை சந்திப்பதன் மூலம் உங்கள் செல்வாக்கு உயரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றப் பாடுபடுவீர்கள். அதற்கான உதவிகள் மேலிடத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு: குடும்ப முன்னேற்றத்தில் உங்கள் சாமர்த்தியமான போக்கு பெரிதும் பயன்படும். தாமதமாகி வந்த சிலரின் திருமணம் இப்போது முடியும். மனம்போல் மாங்கல்யம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. அக்கம் பக்கத்தாரிடம் தேவையில்லாதவற்றைப் பற்றி ஆலோசிப்பதை தவிர்க்கவும். உங்கள் மனதில் பட்டதை செயலில் காட்டுங்கள். தேவையற்ற பேச்சுக்கள் உங்களை பிரச்னைகளை உண்டாக்கும்.

பரிகாரம்:

துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.  தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 3, 7, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்:

செவ்வாய்  வியாழன்.

திசைகள்:

வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்:

வெள்ளை, சிவப்பு.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் தும் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.