விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் - கும்பம்

இந்த புது வருட தொடக்கத்தில் ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு  பாக்கிய ஸ்தானத்தில் குரு  லாப ஸ்தானத்தில் சனி  அயன சயன போக ஸ்தானத்தில்
கேது என கிரகங்கள் அமைந்திருக்கின்றன. சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டு, சனீஸ்வரனின் அருள் பெற்ற கும்ப ராசி அன்பர்களே, பூர்வீகச் சொத்து என்று பிறர் பலத்தை நம்பாமல் உங்கள் சொந்த பலத்தை மட்டுமே உறுதியானது என நம்பி, தளராத தன்னம்பிக்கையுடன் அயராமல் உழைத்து சாதனையாளர் என்ற பெயரைப் பெறக்கூடிய செயலாற்றல் படைத்தவர் நீங்கள். உங்கள் இரக்க சுபாவத்தின் காரணமாக சிலர் பயன்பெறக்கூடுமாயின் சிலர் அதையே உங்கள் பலவீனமாகக் கருதி உங்களை ஏமாற்றவும் முற்படுவார்கள். அதன் காரணமாக நீங்கள் மனவருத்தமடைவீர்கள். சரியானபடி ஆட்களைப் புரிந்து கொள்வதன் மூலம் இக்குறையைப் போக்கிக் கொள்ளுங்கள்.

இந்த ஆண்டு உங்கள்  காரியங்களில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை செயல்படுத்துவீர்கள். செய்தொழிலை விரிவுபடுத்த சிறிது கடன் வாங்கவும் நேரலாம். உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக் கொள்ள வாய்ப்புள்ளதால், வெளியில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாளாக  விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். உடலாரோக்கியத்திலும் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும், மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சரியாகிவிடும். சில நேரங்களில் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்பு இருப்பதால் அவசியமற்ற பொருட்களை வாங்க வேண்டாம். வழக்குகளிலும் தீர்ப்பு வர தாமதமாகும். தேவையற்ற வாய்தாக்களும் உங்களை வருத்தமடையவே செய்யும்.

வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொள்வீர்கள். மற்றபடி சகோதர  சகோதரிகளிடம் உள்ளன்போடு பழகி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆரவாரமில்லாமல் சமூகத்திற்கு நன்மை தரும் நல்ல காரியங்களைச் செய்யும் காலகட்டமாக இது  அமைகிறது. உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் உங்கள் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர்க்க முடியாது. உங்கள் உயர் அதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் தப்ப, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருந்து வர வேண்டும். உங்கள் வசம் உள்ள ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வர வேண்டியதும் அவசியம். சக பணியாளர்களாலும், தொல்லைகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் அவர்களிடமும் பணிவாகவும் சுமுகமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் சிறு சச்சரவுகள் தோன்றும் போதும் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாய் இருப்பது அவசியம், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது. எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரைணயாக நடந்து கொள்வதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்த்து பொருளாதார நெருக்கடி வராமல் காக்கலாம். கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகளுடன் மனக் கசப்பு நேர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து  முடிக்கக்கூடியவற்றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உங்கள் பெயருக்குப் பெருமை சேர்க்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவீர்கள்.

மாணவர்கள் ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விளையாட்டுகளில் கவனத்தைக் குறைத்து, பாடங்களில் கவனத்தைச் செலுத்துவதன் மூலம் படிப்பில் மேன்மை நிலை அடையலாம். நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். அரசியல்வாதிகளுக்கு பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதூறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தலைமை உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு பொறுப்பான பதவியையும், பொருளாதார உதவியையும் செய்வார்கள். பெண்களுக்கு குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானாகவே நிவர்த்தியாகிவிடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும். வேலைக்குப் போகும் பெண்கள் சரியான நேரத்தைக் கடைபிடிப்பது அவசியம். உங்கள் ரகசியங்களை எவரையும் நம்பி வெளிப்
படுத்தாமலிருப்பது நன்மை தரும்.

பரிகாரம்:

பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் தினமும் 4 ஒரு முக மண் அகல் விளக்கு இலுப்பை எண்ணை விட்டு ஏற்றவும்.

அதிர்ஷ்ட எண்கள்:

1, 4, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு புதன் வியாழன்.

திசைகள்:

மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்:

நீலம், பச்சை, வெள்ளை.

சொல்ல வேண்டிய மந்திரம்:

“ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் ஷம் சனைச்சராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.