விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் - கடகம்

இந்த புது வருட தொடக்கத்தில் ராசியில் ராகு  சுக ஸ்தானத்தில் குரு  ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி  களத்திர ஸ்தானத்தில் கேது என கிரகங்கள்
அமைந்திருக்கின்றன. சந்திரனை ராசிநாதனாகக் கொண்டு, அம்பாளின் அருளைப் பெற்ற கடக ராசி அன்பர்களே, நீங்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள். சந்தோஷமான திருமண வாழ்க்கை கிடைக்கப் பெற்றவர்கள். அனைவரையும் சமமாக நடத்துவீர்கள். குருவின் மீது அதீத மரியாதை உடையவர்களாக இருப்பீர்கள். உண்மையாக அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பார். இந்த ஆண்டு காரியங்களை தைரியமாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் எண்ணங்களை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். தன்னம்பிக்கையுடன் காரியமாற்றுவீர்கள்.

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலகப் போக்கில் உங்களுக்கு மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்பட வாய்பில்லை என்றாலும் பெரும் சங்கடங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவும் வாய்ப்பில்லை என்ற அளவில் ஆறுதலடையலாம். உங்கள் பணிகளில் நீங்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவது அவசியம். அரசு பணியில் இருப்பவர்களுக்கு பெரும் சிக்கல்கள் இராதென்ற நிலையில் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்குப் பிரச்னைகள் அவ்வப்போது ஏற்பட்டு பிறகு நிவர்த்தியாகும். வியாபாரிகளுக்கு: வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு உங்களுக்கு இருந்து வரும் வகையில் நீங்கள் செயல்படுவது முதல் தேவையாகும். கொள்முதல் செய்யும் போது தரமான பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்வது மிக அவசியம். அதே போல தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிக் கொள்வதே சிறப்பாகும்.

ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்க வேண்டுமென்பதற்காக வாங்கி அதிக அளவில் பொருட்களை இருப்பு வைப்பதைத் தவிர்ப்பதன் மூலம் பெரும் விரயங்களைத்  தவிர்த்து விடலாம். உங்கள் நேரடி கவனமும் அடிக்கடி இருந்து வருவது நல்லது. கலைத்துறையினருக்கு: தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்ற நிலையுள்ளதால் நீங்கள் சோர்வுக்கு இடம் தராமலும், மற்றவர்களை நம்பாமலும்  நீங்களே நேரிடையாகப் பார்க்கவேண்டியவர்களை பார்த்து பேசுவது தான் உங்களுக்கு வெற்றி தரக்கூடும். சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமுகமாகப் பழகி வருவதும் அவசியம். நடனம், ஸ்டண்ட் போன்ற துறைக் கலைஞர்கள் கூடுதல் வாய்ப்பைப் பெறக்கூடும். வெளியூர்ப் பயணங்களின் போது கவனம் தேவை. புதிய படங்களுக்கான வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கக்கூடும்.

மாணவர்களுக்கு: விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் இருக்குமாயினும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். மின்னணுத்துறை கல்வியில் சிலர் வாய்ப்பு பெறக்கூடும். ஜாதகப்படி தசாபுக்தி பலன்கள் பலமாக அமையப் பெற்றவர்கள் மட்டுமே உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவது சாத்தியமாகும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று ஹாஸ்டல்கள் போன்றவற்றில் தங்கிப் படிக்க நேரலாம். அத்தகையவர்கள் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அரசின் கல்விச் சலுகைகள் கிடைப்பதில் கூட சிரமங்கள் ஏற்படக்கூடும். சிலர் மேற்படிப்பை தொடர முடியாமல் வாய்ப்புகளைத் தேடவும் முயல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு:  தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம் பட நிறைவேற்றி  தலைமையின் பாராட்டுகளைப்பெறுவது இப்போதைய நிலையில் மிகக் கடினமான இருக்கக்கூடும். 

இருப்பினும் மாற்றும் முகாம்களுக்குத் தாவும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் உறுதியான விசுவாசத்துடன் இருந்து வருவதே எதிர்கால நன்மைகளுக்கு வழி வகுக்கும். பொறுமையாக இருந்து உங்கள் பணிகளைப் பழுதில்லாமல் செய்து தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின் ஆதரவையும் பெறுவதற்கு கடினமான உழைப்பு தேவை என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பெண்களுக்கு இதுவரை பல காரணங்களால் தள்ளிப்போய் வந்த சிலரது திருமணம் நிறைவேற வாய்ப்புண்டு. மறைமுக சேமிப்புகளில் ஓரளவு பணம் சேரும் என்பதாலும் அது உங்கள் கணவரின் பணத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் அவருக்குத் தக்க சமயத்தில் பயன்படக்கூடிய வகையில் அவருக்கு அமையும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்கு தனவரவு ஏற்படக்கூடும். வேலைகளின் காரணமாக பிரிந்திருந்த தம்பதி சேர்ந்து வாழும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக்கூடும்.

பரிகாரம்:

துர்க்கை அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:

2, 3, 7.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள் வியாழன்.

திசைகள்:

மேற்கு, வடமேற்கு.

நிறங்கள்:

வெள்ளை, நீலம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீகர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.