விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் - மகரம்

இந்த புது வருட தொடக்கத்தில் ராசியில் கேது  களத்திர ஸ்தானத்தில் ராகு  தொழில் ஸ்தானத்தில் குரு  அயன சயன போக ஸ்தானத்தில் சனி என
கிரகங்கள் அமைந்திருக்கின்றன. சனிபகவானை ராசிநாதனாகக் கொண்டு, சனீஸ்வரனின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே, கல்விமான் என்று பலராலும் பாராட்டப்படும் அளவுக்கு உங்களிடம் சிறப்பான அறிவாற்றல் மட்டுமல்லாமல், கற்பனைத் திறனும் அபரிமிதமாக அமைந்திருக்கும். இளம் வயதில் எப்படியிருப்பினும் உங்கள் அயராத உழைப்பால் நாளும் படிப்படியாக முன்னேறி வாழ்வில் ஓர் உயர்வான உன்னத நிலையை எட்டிப்பிடித்துச் சாதனையாளராகத் திகழ்வீர்கள். இந்த ஆண்டில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வைக்கண்டு ஆச்சரியப்படுவார்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்கிற ரீதியில் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணப்படுவீர்கள்.

வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரயங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அதோடு பிள்ளைகளின் நலனுக்காகவும் சிறிது செலவு செய்ய நேரிடும். சமூகத்தில் உங்கள் பெயர் கௌரவம் கூடும். இழப்புகளை ஈடு செய்யும் அளவுக்கு புதிய புதிய வாய்ப்புகளும் தேடி வந்து கொண்டிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு: உங்கள் நீண்டகால விருப்பங்களெல்லாம் எளிதாகக் கிடைக்கப் பெற்று உடலும் உள்ளமும் உற்சாகமடைவீர்கள். உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்குமாதலால் மறைமுக வருமானங்கள் போன்ற தனிப்பட்ட சலுகைகள் உங்கள் பொருளாதார நிலையைப் பெருமளவில் உயர்த்தி விடும். வேலை தேடி அலைந்து வந்த சிலர் இப்போது நல்லதொரு வேலையில் அமர்ந்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகி வருவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கும், திருப்திகரமான லாபமும் உண்டாகும்.

பொருளாதார நிலையில் உண்டாகும் முன்னேற்றத்தின் காரணமாக சேமிப்புகளிலும் அசையா சொத்துகளிலும் முதலீடு செய்வீர்கள். வண்டி, வாகன வசதிகளையும் அமைத்துக் கொள்வீர்கள். தரமான பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும், வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதிலும் உங்கள் நேரடி கவனத்தைச் செலுத்துவது நல்லது. அதிகமான அளவில் எந்தப் பொருளையும் இருப்பு வைக்காமல் இருப்பது விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க உதவும். கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள்  பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அதற்கேற்ற முறையில் உங்கள் தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.  சோர்வின்றி உழைத்து உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள். இதனால் அனைவரின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

மாணவர்கள் கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களாகச் சிறப்பிடம் பெற்று விளங்குவீர்கள். அரசு மற்றும் பொது சமூகநல அமைப்புகள் வழங்கும் கல்விச் சலுகைகள் உங்களுக்குக் கிடைத்து பெருமையும் புகழும் அடைவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள். அறிவியல், மருத்துவம் போன்ற துறையில் பயில்வோர் கூடுதல் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உயர்கல்வி பெற வெளிநாடுகளுக்குச் செல்லும் விருப்பம் நிறைவேறி மகிழவும் சிலருக்கு வாய்ப்புண்டு. சிலர் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய நிலையையும் அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு:  உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும் உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதித்துப் போற்றிப் பாராட்டுவார்கள்.

பொருளாதார வசதி நல்ல முறையில் மேம்படும் என்ற காரணத்தால் வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவைகளைப் பெற்று மகிழ்வீர்கள். பொது மக்களிடமும் உங்களுக்கு பெருமதிப்பு இருந்து வரும் என்பதால் பலரின் அன்புத் தொல்லைகளுக்கும் நீங்கள் ஆளாக நேரும். பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பிரச்னைகள் எதுவும் எழாத வண்ணம் மிக நல்ல முறையில் நடத்திச் செல்வீர்கள். சிலர் விரும்பியவர்களையே மணந்து கொள்ளும் இனிய வாய்ப்பைப் பெறுவீர்கள். மணமான பெண்களில் சிலர் இப்போது மகப்பேறு பாக்யத்தைப் பெற்று மகிழ்வீர்கள். மகளின் அமைப்புகளில் பொறுப்பானதும் பெருமைக்குரியதுமான பதவிகளைச் சிலர் பெறுவீர்கள். சேமிப்புகள் பெருகி மன மகிழ்ச்சியடைவீர்கள் என்றாலும் அதை நம்பகமற்ற சீட்டு கம்பெனிகளில் கொடுத்து ஏமாறாமல் முறையாக வங்கிகளில் சேமிப்பது மிக அவசியம்.

பரிகாரம்:

பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:

2, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள்  புதன்  வெள்ளி.

திசைகள்:

தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்:

வெள்ளை, நீலம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.