விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன் - ரிஷபம்

இந்த புது வருட தொடக்கத்தில் தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு  ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு  அஷ்டம ஸ்தானத்தில் சனி  பாக்கிய
ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் அமைந்திருக்கின்றன. சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்டு மஹா லட்சுமியின் அருள் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் உண்மை உள்ளம் கொண்டவர்கள். உங்கள் சமயோஜித புத்தியால் பல காரியங்களை நடத்திக் கொள்பவர்கள். ஆடம்பரமாக வாழ நினைப்பவர்கள். சுப காரியங்கள் உங்கள் தலையீட்டால் மிகச் சிறப்பாக நடந்து முடியும். ஒருவரின் முகத்தைப் பார்த்து அவர் சொல்வது உண்மையா பொய்யா என்பதை உங்களால் கிரகிக்க முடியும். இந்த ஆண்டு சிலருக்கு புதிய வீடுகளுக்கு மாறும் சூழ்நிலை உண்டாகும். பணவரவும் திருப்திகரமான நிலையிலேயே இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆழ்ந்த நுண்ணறிவை அனைவரும் பாராட்டுவார்கள். உங்கள் அதிகாரமும், பதவியும் உங்களைப் பலப்படுத்தும். உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைப் புகுத்துவீர்கள்.

புதிய கடன்களும் கிடைக்கும். சிந்தனையில் தெளிவும் செயலில் வீர்யமும் பெற்று உங்களது செயல்களை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் உங்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியைக் காண்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்றவற்றை எளிதாகப் பெற்று மகிழ்வீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கப்பெற்று மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மறைமுக வருமானங்களின் காரணமாக உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு பெருகும் என்பதுடன் அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கும் நாளும் உயர்ந்து வரும். வியாபாரிகள் முழுமனநிறைவைப் பெறக்கூடிய வகையில் லாபம் கணிசமான அளவுக்கு உயரும். இருப்பினும் வியாபார ஸ்தலத்தில் உங்கள் நேரடிப் பார்வை இருந்து வருவது அவசியம். கூடுமானவரை வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதில் உங்கள் கவனம் இருக்க வேண்டும்.

இல்லையெனில் போட்டியாளர்களின் பக்கம் உங்கள் வாடிக்கையாளர்களின் பார்வை திரும்பிவிட இடமுண்டு. எனவே தரமான பொருட்களைக் கொள்முதல் செய்வதில் நீங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துவது அவசியம். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால் நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் சக கலைஞர்களின் போட்டியும் கடுமையாகவே இருக்கக்கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. உங்கள் புகழும் பொருளாதார அந்தஸ்தும் உயரக்கூடிய வாய்ப்புண்டு. எல்லோரிடமும் அனுசரணையாகவும் சுமூகமாகவும் நடந்து கொள்வதன் மூலம் உங்களுக்குரிய வாய்ப்புகளில் சில, பிற கலைஞர்களுக்குக் கை நழுவிப் போகாமல் காத்துக்கொள்ள முடியும் என்பது உங்கள் கவனத்தில் இருந்து வருவது அவசியம்.

மாணவர்கள் படிப்பில் மட்டுமில்லாமல் விளையாட்டுப் போட்டிகள் போன்ற பிற துறைகளிலும் நீங்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.  சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறக்கூடிய நிலை உண்டு.  அரசு வழங்கும் கல்விச் சலுகைகள் போன்றவற்றைப் பெற்று மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் தன்னலமற்ற  உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.  உங்கள் மன உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும்.  இதன் காரணமாக  உங்கள் பொருளாதார அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வது சாத்தியமாகும். 

தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதிப்பார்கள் என்பதால் நாளுக்கு நாள் உங்கள் செல்வாக்கு உயரக் காண்பீர்கள்.  உங்கள் மன உறுதியைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்பதையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது. வேலையின் நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருந்த பெண்கள்  இப்போது சேர்ந்து வாழும் நிலைமை உருவாகும்.  திருமணம் தள்ளிப்போய் வந்த சிலருக்கு இப்போது திருமண யோகம் கிட்டும்.  சிலருக்கு மனம் விரும்பியவரையே மாலையிட்டு மணம் முடிக்கும் வாய்ப்பு அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.  திருமணம் போன்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து மகிழும் வாய்ப்பு உண்டு.  புத்திர வழியில் மகிழ்ச்சியடையும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.  மறைமுகச் சேமிப்புகள் மனநிறைவு தரும்.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். பணப் பிரச்னை நீங்கும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.

அதிர்ஷ்ட எண்கள்:

2, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள்  வெள்ளி.

திசைகள்:

மேற்கு, வடமேற்கு.

நிறம்:

வெள்ளை.

சொல்ல வேண்டிய மந்திரம்: 

“ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்ம்யை நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.